பம்பாய் பட பாணியில் வேற்று மத பெண்ணை, காதலித்து திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் கத்தியால் குத்தியும் இரும்பு கம்பியால் அடித்தும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தடுத்த மனைவியையும், கொல்ல முயன்ற போது கொலையாளியை பொது மக்கள் ஆவேசமாகி தாக்கிய சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் பில்லாபுரம் நாகராஜ் ஹைதராபாத்தில் உள்ள கார் ஷோரூமில் சேல்ஸ் மேனாக பணிபுரிந்து வந்தார்.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் கடந்த சில வருடங்களாக பம்பாய் பட பாணியில் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு நாகராஜும் , சுல்தானாவும் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இந்நிலையில், நாகராஜ் , தனது மனைவி சுல்தானாவுடன்,புதன்கிழமை இரவு ஹைதராபாத் நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சரூர்நகர் தாசில்தார் அலுவலகம் அருகே வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் அவர் வந்த போது அவரது மோட்டார் சைக்கிளை மறித்த 4 பேர் கொண்ட கும்பல், மனைவி சுல்தானாவின் கண்முன்னே நாகராஜை கத்தியால் குத்தி கீழே சாய்த்தனர்.
உயிருக்கு போராடிய அவரை காப்பாற்ற மனைவி போராடிய நிலையில், அவரை பிடித்து இழுத்து போட்டு விட்டு , நாகராஜை சரமாரியாக அடித்து கொடூரமாக கொலை செய்தது அந்தக் கும்பல். தாக்குதல் நடத்திய 4 பேரும் தனது உறவினர்கள் என்பதை அறிந்த சுல்தானா தனது கணவரின் உயிரை காக்க போராடினார். ஆனால் ஆணவ கொலை வெறியில் இருந்த அந்த 4 பேரும் அடங்கவில்லை.
ஏற்கனவே தலை சிதறி உயிரிழந்து கிடந்த நாகராஜின் சடலத்தை மீண்டும் இரும்பு கம்பியால் தாக்குவதற்கு ஒருவன் எத்தனிக்க சுல்தானா அவனை தடுத்தார், இதையடுத்து அந்த பெண்ணை தாக்க கம்பியை ஓங்கினான் அந்த கொடூரன். இதனை கண்டு ஆவேசமான மக்கள் கையில் இருந்த ஹெல்மெட் உள்ளிட்டவற்றை கொண்டு அந்த கொலையாளி இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து , மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நாகராஜின் சடலத்தை கைப்பற்றி பிணகூறாய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார். கொலை சம்பவத்தில் சிக்கிய சுல்தானாவின் உறவுக்கார இளைஞரிடம் நடத்திய விசாரணையில், தங்கள் வீட்டுப்பெண்ணை வேறு மதத்தை சேர்ந்த இளைஞர் திருமணம் செய்து கொண்டதை ஏற்க இயலாமல், ஆத்திரத்தால் சுல்தானாவின் உறவினர்கள் திட்டமிட்டு இந்தக் கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.