சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய பணபலம் படைத்த மாஃபியா கும்பலால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, ஜாமீனில் வெளியே வந்துள்ள அவரது கணவர் ஹேம்நாத் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
சின்னத்திரையில் வெளியான பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தவர் சித்து என்கிற VJ சித்ரா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவரான ஹேம்நாத் தான் காரணம் என கைது செய்யப்பட்டு, பின்னர் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் கடந்த 25 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில் தனது மனைவியான சித்ராவும், தானும் மிகுந்த அன்னியோன்யத்துடன் இல்லற வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது சின்னத்திரை பிரபலங்கள் அனைவருக்கும் தெரியும் என்பதை குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது மனைவி சித்ரா தற்கொலை செய்துகொண்டபோதே தானும் தனது வாழ்வை முடித்துக்கொள்ள எண்ணியதாகவும், ஆனால் தனது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக தன் மீது சேற்றை வாரி இறைத்தவர்கள்முன் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கவே இன்னும் உயிரோடு இருப்பதாகவும் ஹேமந்த் தெரிவித்துள்ளார். மேலும் தனது மனைவியின் தற்கொலைக்குப் பின்னால் பண பலமும், அரசியல் பலமும் கொண்ட மாஃபியா கும்பல் இருப்பதும் பலருக்கு தெரிந்த உண்மை எனினும், அவர்களுக்கு பயந்து அதை வெளியில் கூற அனைவரும் தயங்குவதாகவும் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அவர்களின் பண பலத்துக்கு முன்னால் தன்னைபோன்ற சாதாரண மனிதனால் எதுவும் செய்ய இயலாது எனவும், அப்படி செய்தாலும் தனது மனைவி தனக்கு திரும்பக் கிடைக்கப்போவதில்லை என்பதை தான் உணர்ந்துள்ளதாகவும் ஹேம்நாத் தெரிவித்துள்ளார். மேலும், தான் தன்மீது சுமத்தப்பட்டுள்ள பழியை போக்கவே தற்போது வாழ்ந்து வரும் நிலையில், சுப்பா ராவ், சரோஜா ராவ், மதுசூதனன், சாய் வெங்கடேஷ், யாமினி, இம்மானுவேல் ராஜா உள்ளிட்ட 7 பேர் அடங்கிய ஒரு கும்பல் தன் மூலம் தனது மனைவி சித்ராவின் தற்கொலைக்கு காரணமாக இருந்த பணபலம் படைத்த மாஃபியா கும்பலை தொடர்புகொண்டு அவர்களிடம் இருந்து பணம் பெற முயல்வதாகவும், இச்செயலுக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் தன்னை கொலை செய்துவிடுவதாக அந்த கும்பல் மிரட்டுவதாக தெரிவித்த ஹேமந்த், மற்றொருபுறம் தனது மனைவியின் தற்கொலைக்கு காரணமான கும்பலின் பெயரை வெளியில் கூறினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவோம் என அவர்கள் மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்வாறு இரு தரப்பில் இருந்தும் மாறி மாறி தன்னை மிரட்டி வருவதால், தனது உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதாக ஹேம்நாத் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தன் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கும்வரை தான் உயிரோடு வாழ விரும்புவதால் உயிருக்கு பயந்து தன் வீட்டிலிருந்து வெளியேறி வேறொரு இடத்தில் தான் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ஹேம்நாத், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க தனக்கு உரிய பாதுகாப்போ அல்லது தனது சொந்த செலவில் போலீஸ் பாதுகாப்போ வழங்கி தனது உயிரை காப்பாற்றுமாறு புகாரின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தனக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் முன் தனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், தனது மனைவியின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்தவர்கள் என இறப்புக்கு முன் தனது மனைவி கூறிய பெயர்களையும், அவர்களின் விவரங்களையும் தனது நம்பிக்கைக்கு உரிய சிலர் வெளிக்கொண்டு வருவார்கள் என்பதையும் ஹேம்நாத் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.