முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாட்ஸ் அப் குழு ஒன்றில் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசி மீரா மிதுன் ஆடியோ பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மீரா மிதுன், தன் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குற்றஞ்சாட்டினார்.
இதன் விசாரணையின்போது, அவதூறு பரப்புவதையும், உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பதிவிடுவதையும் மீராமிதுன் வாடிக்கையாக கொண்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மீரா மிதுனை கைது செய்து விசாரிக்கவும் உத்தரவிட்டது.