சென்னையில் பள்ளி வேன் மோதி 2ஆம் வகுப்பு பயின்ற மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வர் மீது வழக்குப் பதியப்பட்டு, வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கல்வி அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கம் அருகே ஆழ்வார்திருநகர் பகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்ற தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தீக்சித் என்ற 8 வயது சிறுவன் 2ஆம் வகுப்பு பயின்று வந்தான். திங்கட்கிழமை காலை வீட்டில் இருந்து வேனில் ஏறி பள்ளிக்கு சென்ற தீக்சித், அங்கு வளாகத்தில் இறங்கியிருக்கிறான். அப்போது, வேனை திருப்ப முயன்ற ஓட்டுநர், தீக்சித் நின்றிருந்ததை கவனிக்காமல் மோதியதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வாகன ஓட்டுநர் பூங்காவனம், வேன் ஊழியர் ஞான சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தினர்.
பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் விபத்து எப்படி நிகழ்ந்தது என்ற முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. விபத்து ஏற்படுத்திய வேனில் 13 மாணவ, மாணவிகள் பயணித்திருக்கின்றனர். வேன் பள்ளி வளாகத்திற்குள் வந்ததும் மாணவர்கள் அனைவரும் கீழே இறங்கி வகுப்பறையை நோக்கி சென்றிருக்கின்றனர். அவர்களை வேன் ஊழியர் ஞான சக்தி வகுப்பறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அப்போது, மாணவன் தீக்சித் மட்டும் வேனைவிட்டு இறங்கி, முன்பக்கமாக, இடதுபுறம் உள்ள சக்கரத்தை ஒட்டி நின்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனை ஓட்டுநரும், வேன் ஊழியரும் கவனிக்காத நிலையில், வேனை பார்க்கிங் செய்யும் நோக்கோடு, ஓட்டுநர் வலதுபுறமாக திருப்பியதாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு நின்றிருந்த தீக்சித், வேனின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஒரே மகனை இழந்த துக்கம் தாளாமல் தாயும், தந்தையும் பரிதவித்தது காண்போரை கண்கலங்கச் செய்தது.
விபத்து தொடர்பாக, பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, மெட்ரிக் பள்ளி கல்வி இயக்குநரகம் சம்பந்தப்பட்ட வெங்கடேஸ்வரா பள்ளிக்கு உத்தரவிட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் பூங்காவனம் 64 வயதுடையவர் என்பதும், செவித்திறன் குறைபாடு உடையவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டோருக்கு பணி ஓய்வு கொடுக்காமல் 64 வயது கொண்டவரை பள்ளி வாகனம் ஓட்ட அனுமதித்தது எப்படி என பள்ளி தாளாளர், முதல்வரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் விதிகளை வகுத்துள்ள நிலையில், அந்த விதிகளுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளியில் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனரா? என விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி, பள்ளி வாகனம் என்றால் அதன் முன்புறமும், பின்புறமும் பள்ளி வாகனம் என்று சக வாகன ஓட்டிகளுக்கு நன்றாக புலப்படும் வகையில் எழுதியிருக்க வேண்டும்.
முதலுதவி பெட்டியை பராமரிக்க வேண்டும். ஜன்னல் கம்பிகள் நீளவாக்கில் பொருத்தப்பட வேண்டும். தீயணைக்கும் கருவி வாகனத்தில் இருக்க வேண்டும். கதவு தாழ்ப்பாள்கள் பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். அனைத்து பள்ளி வேன்களிலும் பள்ளி சார்பில் காப்பாளர் பயணிக்க வேண்டும். பள்ளி வாகனத்தை ஓட்டும் ஓட்டுநர் குறைந்தது 10 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் அவன் படித்த வளசரவாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விபத்து தொடர்பாக வரும் 24 மணி நேரத்திற்குள் பள்ளி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்து நடைபெற்றது பற்றி அறிந்தும் பிற்பகல் வரை தாளாளர் பள்ளிக்கு வராதது குறித்தும், பள்ளி நிர்வாகத்தால் இயக்கப்படும் பேருந்துகளுக்கு தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்காதது குறித்தும் விளக்கமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
64 வயதானவரை பள்ளி வேன் ஓட்டுநராக நியமித்தது ஏன்? என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பள்ளி வாகன பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக சென்னையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டது. இதனிடையே, உடற்கூறாய்வுக்கு பின்னர் மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.