சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில், அரியவகை அணில் குரங்குகளை கடத்தி நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த, பூங்கா ஊழியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 8-ந் தேதி அங்கிருந்த இரண்டு அணில் குரங்குகள் மாயமானது. குரங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டின் கம்பிகள் அறுக்கப்பட்டிருந்த நிலையில், ஓட்டேரி போலீசில் புகாரளிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை வைத்து, பூங்காவில் தற்காலிகமாக வேலை செய்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சக்திவேலையும், அவரது நண்பர் ஜானகிராமனையும் போலீசார் கைது செய்தனர்.
சக்திவேல் உதவியுடன் பார்வையாளர் போல் பூங்காவுக்குள் புகுந்த ஜானகிராமன், கட்டரை வைத்து கூண்டை அறுத்து, அணில் குரங்குகளை பையில் போட்டு எடுத்துக் கொண்டு சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
இரண்டு அணில் குரங்குகளையும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன், வினோத் ஆகியோரிடம் நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குரங்குகளை விற்பனை செய்த மற்றும் வாங்கிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வனவிலங்கு சட்டப்படி அரியவகை விலங்கினங்களை வாங்குவதும், விற்பதும் சட்ட விரோதம் ஆகும்.