கோயம்பேடு காய்கறி சந்தையில் சாயம் கலந்த 400 கிலோ அளவிலான பச்சைப் பட்டாணி, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சாயம் ஏற்றப்பட்ட காய்கறிகளை உண்பதால் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் உள்ளிட்டோர் இன்று திடீர் ஆய்வினை மேற்கொண்டனர். காய்கறிகள், பழங்கள் போன்ற கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது, 350 முதல் 400 கிலோ எடையுள்ள பச்சை பட்டாணி, பட்டர் பீன்ஸ், 40 கிலோ அளவிலான கலர் அப்பளம் ஆகியவை முழுவதும் சாயத்தில் நனைத்து விற்பனை செய்துவந்தது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து, உடனே நூற்றுக்கும் மேற்பட்ட கடையிலிருந்து பச்சை பட்டாணி, பட்டர் பீன்ஸ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததுடன், அங்கு மறைத்து விற்கபட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த ஆய்வுக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார், சாயம் ஏற்றப்பட்ட பொருட்கள் குறித்து கடையின் உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்கபட்டதாகவும், உரிய விளக்கம் அளிக்காத பட்சத்தில் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், இரவு முழுவதும் சாயத்தில் ஊறவைத்து பச்சைப் பட்டாணிகள் மற்றும் பட்டர் பீன்ஸ்கள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது போன்ற சாயம் ஏற்றப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கும் போது பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பேசிய அவர், இயற்கையான பட்டர் பீன்ஸ்கள் வெள்ளை நிறமாகவே இருக்கும் என்றும் சாயம் ஏற்றி அவை இளஞ்சிவப்பு நிறத்தில் விற்கப்படுவதாக கூறினார்.
இதனை தொடர்ந்து, சாயம் ஏற்றப்பட்ட காய்கறிகள், பழங்கள் உண்பதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக சதீஸ்குமார் எச்சரிக்கை விடுத்தார். மேலும், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் மனதில் கொண்டு, வியாபாரிகள் மனசாட்சியோடு செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.