சென்னை கிண்டியில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வேளாண்மைத்துறை பூங்கா பணிகளை, மார்ச் மாதத்திற்குள் முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
6.8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவில், நடைபயிற்சி மேற்கொள்ள அகலமான நடைபாதை, மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நறுமணத் தாவரங்கள், மூலிகைச் செடிகளும் அமைக்கப்பட உள்ளன.
இங்கு, இயற்கை வேளாண்மை, காளான் வளர்ப்பு, கூரைத் தோட்டம் போன்ற நேரடி மாதிரிகள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. மேலும், பொதுமக்களை கவரும் வகையில், வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
3 தளங்கள் கொண்டதாக இப்பூங்கா அமைக்கப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் தளங்களில், சிறிய திரையரங்கம், உணவு பரிசோதிக்கும் கூடம், பூச்சி மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம், பூச்சிகள் அருங்காட்சியகம் அமையவுள்ளது. மூன்றாம் தளத்தில் அதிகாரிகளுக்கான அறைகள் அமைக்கப்படுகின்றன.