தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டில் 6 ஆயிரத்து 999 எம்.பி.பி.எஸ் இடங்களும் மற்றும் ஆயிரத்து 930 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன. இதற்கான தரவரிசைப் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில், இன்று மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர் பிரிவுகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தமாக 92 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்களும், விளையாட்டு பிரிவினருக்கு 7 எம்.பி.பி.எஸ் இடங்கள், 1 பி.டி.எஸ் இடமும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு பிரிவினருக்கு 10 எம்.பி.பி.எஸ் இடங்கள், 1 பி.டி.எஸ் இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் அரசு பள்ளி மாணவர்களுகான 7.5% சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வும், 30ம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறவுள்ளது.