சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் பெண் காவல் ஆய்வாளர் உட்பட 9 பேர் மீது அதே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 13-ஆம் தேதி இரவு முகக்கவசம் அணியாமல் வந்த அப்துல் ரஹீம் என்ற சட்டக்கல்லூரி மாணவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று கொடுங்கையூர் போலீசார் அடித்துத் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து அந்த மாணவர் வெளியிட்ட வீடியோவும் வெளியான நிலையில், அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் நசீமா உட்பட 9 பேர் மீது அதே காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவை திருப்பி வைத்து விட்டு தன்னை பைப்பால் அடித்துத் துன்புறுத்தியதாகவும், பூட்ஸ் காலால் உதைத்ததாகவும் தன் மீது சிறுநீர் கழிக்க முயன்றதாகவும் துர்நாற்றம் வீசும் சாக்கடை நீரை தன் மீது ஊற்றி துன்புறுத்தியதாகவும் மாணவர் அளித்த வாக்குமூலம் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கபப்ட்டுள்ளது.
காவல்துறையினர் மீதே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், ஆர்டிஓ விசாரணை நடத்தவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.