கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் அனைவருக்கும் தொற்று அறிகுறிகள் இருக்கிறதா?, அவர்களின் குடும்பத்தினர் யாருக்கேனும் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதா என கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்வதோடு, வாய், மூக்கு ஆகியவை முழுமையாக மூடியிருக்கும்படி முகக்கவசம் அணியவும், இதனை மீறி முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருப்போரை உடனடியாக வெளியேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபருக்கும் 2 மீட்டர் இடைவெளி உள்ளபடி பணியிடத்தை மாற்றியமைக்கவும், தேவையான இடங்களில் கிருமி நாசினி வைப்பதோடு, தற்காலிக கைக்கழுவும் இடம் அமைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கேண்டீன்களில் ஒரே நேரத்தில் 50சதவீதம் பேர் மட்டுமே இருப்பதை உறுதி செய்யவும், கேண்டீனில் உணவு பரிமாறும் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தோடு, ஊழியர்களை வீடுகளை அழைத்துச் சென்று வரும் வாகனங்கள் கூட்டம் இல்லாத படியும் ஜன்னல்கள் திறந்தபடியும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.