சென்னையில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள், வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்கள், கட்டுமான கழிவுகளை பொது இடங்களிலும், சாலைகளிலும் கொட்டுபவர்கள், நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களில் குப்பைகளை எறிபவர்கள் உள்ளிட்டோருக்கு மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன் படி அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டியவர்கள், கட்டுமான கழிவுகளை கொட்டியவர்கள் உள்ளிட்டோரிடமிருந்து 22 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.