சென்னையில் பல்வேறு வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, 2 வங்கி ஊழியர்கள் உட்பட 9 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வங்கிகளில் கடன்கள் பெறுவதற்கு பல்வேறு படி நிலைகளில் வாடிக்கையாளரின் ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன. இதனால் பலருக்கும் எளிதில் கடன் கிடைப்பதில்லை.
இதனை அறிந்துகொண்ட மோசடி கும்பல்கள் வங்கிகள் ஏற்றுக்கொள்வதற்கு ஏற்றவாறு போலி ஆவணங்களை தயார் செய்து மோசடி செய்வதாக புகார் எழுந்தது. இராஜாஜி சாலையில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 44 கணக்குகளை துவங்கி, அதில் 15 பேருக்கு தனிநபர் கடன் வழங்கியதாக சுமார் ஒரு கோடியே 51 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இதேபோன்று, மேடவாக்கம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை மேலாளர், பெண் ஒருவருக்கு போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக் கடன் வாங்கிக் கொடுத்து மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதேபோன்று, கரூர் வைசியா, இந்தியன் வங்கி உட்பட 5 வங்கிக் கிளைகளில் அதன் மேலாளர்கள் கொடுத்த புகார்களின் பேரில் 2 வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.