சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் அதிவேகமாக சென்ற கார் சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது மோதிய கோர விபத்தில் பொறியியல் பட்டதாரிகள் உட்பட 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நாளை நேர்முக தேர்வுக்கு செல்லவிருந்த இளைஞர்கள், அதிவேக பயணத்தால் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
துரைப்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரியில் இந்த ஆண்டு பொறியியல் முடித்த ராஜஹரிஷ் என்பவர் உள்ளிட்ட இளைஞர்கள் சிலர் நாளை நடக்கவிருக்கும் கேம்பஸ் இண்டர்வியூக்காக சொந்த ஊர்களில் இருந்து வந்து கேளம்பாக்கத்தில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளனர்.
படிப்பை முடித்து வேலைக்குச் செல்ல போகிறோம் என்ற சந்தோஷத்தில் சனிக்கிழமை இரவு இவர்கள் அனைவரும் ராஜஹரிஷுக்கு சொந்தமான இன்னோவா காரில் அடையாறுக்கு பார்ட்டிக்கு சென்றதாக கூறப்படுகிறது. பார்ட்டியை முடித்துவிட்டு, அடையாறில் இருந்து 2பேர் மட்டும் பைக் மூலம் கேளம்பாக்கம் செல்லவே, ராஜஹரிஷ், அஜய், ராகுல், அரவிந்த் சங்கர் ஆகிய 4 பேரும் நைட் ரைடு செல்லலாம் எனக் கூறி காரில் புறப்பட்டுள்ளனர். காரை நவீன் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார்.
பெருங்களத்தூரில் accenture நிறுவனம் அருகே வந்த இவர்கள், இரு வாகனங்களுக்கு இடையில் புகுந்து அதிவேகமாக செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் சென்று கொண்டிருந்த லோடு லாரி மீது உரசியது.
அப்போதே, ஓட்டுநர் அமர்ந்திருக்கும் காரின் இடதுபுறம் முழுவதும் சேதமடைந்த நிலையில், வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் கண்மூடித்தனமாக சென்ற கார் சாலையோரமாக பழுதடைந்து நின்றிருந்த இரும்பு கம்பி லோடு லாரியின் பின்பக்கத்தில் பலமாக மோதியது. லாரிக்கு அடியில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அதில் பயணம் செய்த ஓட்டுநரும், இளைஞர்கள் நால்வரும் தலைநசுங்கி பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார், 2 மணி நேர போராட்டத்திற்கு பின் 5 பேரின் சடலங்களை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேக பயணமே விபத்துக்கு முக்கிய காரணம் எனக் கூறும் போலீசார், விபத்து நடந்த போது, காரில் இருந்த யாருமே சீட் பெல்ட் அணியாததால், ஏர் பேக்கும் வேலை செய்யவில்லை என தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், சம்பவ இடத்தில் விபத்துக்களை தவிர்க்க, சாலையோரமாக வாகனங்களை நிறுத்தக் கூடாது என எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருக்கிறது. அதனை மீறியும் சில வாகன ஓட்டிகள் செயல்படுவதாகவும், நெடுஞ்சாலைகளில் கேட்பாறின்றி நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை நெடுஞ்சாலைத் துறையினர் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். அத்தோடு, சமீப காலமாக நள்ளிரவு 12மணிக்கு பிறகு நடத்தப்படும் வாகன சோதனையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், வாகன சோதனையை தீவிரப்படுத்தி, கண்காணித்தால் இதுபோன்று கோர விபத்து நிகழாமல் தடுக்க வாய்ப்பிருக்கிறது எனவும் வாகன ஓட்டிகள் யோசனை தெரிவிக்கின்றனர்.
விபத்தில் இளைஞர்கள் உடல்கள் மோசமான அளவுக்கு நசுங்கிவிட்டதால், அவர்கள் மது அருந்திவிட்டு வந்தார்களா என்பதை பரிசோதிப்பது கடினமாக உள்ளது எனவும், மற்ற நண்பர்களிடம் விசாரித்த போது அடையாறில் பார்ட்டிக்கு சென்றுவிட்டு வந்தது தெரியவந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ராஜஹரிஷின் தந்தை சென்னையில் ட்ராவல்சும், ராகுலின் தந்தை தோல்பொருள் தொழிற்சாலையும் நடத்தி வருகின்றனர். நண்பர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததை தாளாமல் சக இளைஞர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
அண்மையில் இதேபோன்று, பெங்களூருவில் அதிவேக பயணத்தால் ஓசூர் திமுக எம்.எல்.ஏ. மகன் உட்பட 7 பேர் கார் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.