சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, அரும்பாக்கம், கிண்டி, கோடம்பாக்கம், வடபழனி, ராயப்பேட்டை உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
கருமேகம் சூழ்ந்து கொட்டித் தீர்த்த மழையால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். சாலைகளிலும்மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாமக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், திருச்செங்கோடு - சேலம் பிரதான சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் தத்தளித்தபடியே சென்றன. மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் கலந்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மழை நின்று அரை மணி நேரத்திற்கு பிற்கு வெள்ள நீர் வடிந்தது.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், காலையில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. அங்கு உழவு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
சென்னை அடுத்த திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், சாலைகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே சிவாஜி நகரில் சாலைகளில் தேங்கிய மழைநீர் வீட்டுக்குள்ளும் புகுந்தது.