சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் அடுக்குமாடிக் குடியிருப்பு தரமற்ற வகையில் கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரில், குடிசைமாற்று வாரியத்தை சேர்ந்த 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
அங்கு தொட்டாலே பூச்சுகள் உதிரும் வகையில், கட்டுமானம் தரமற்ற வகையில் உள்ளதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டதை அடுத்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், குடிசைமாற்று வாரிய உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, அந்த கட்டிடங்களை ஐஐடி சிறப்புக் குழு ஆய்வு செய்ய உள்ளது. சிறப்புக் குழு ஆய்வறிக்கையின் அடிப்படையில் மேலும் சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.