சென்னை சூளைமேட்டில் வருமான வரித்துறை ஆணையரின் காரை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்ததாக பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூளைமேடு பகுதியில் வாகனச் சோதனையின்போது, வருமான வரித்துறை ஆணையரின் போர்டு வைத்த காரில் சென்ற 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பிரகாஷ் என்பவர் தப்பியோடிய நிலையில், காரில் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வாணி மற்றும் முருகன் ஆகியோரிடம் விசாரித்தனர்.
இதில், வாணியின் 2வது கணவரான பிரகாஷ், பெசன்ட்நகரைச் சேர்ந்த, வருமான வரித்துறையில் இணை ஆணையர் அந்தஸ்த்தில் உள்ள ஐஆர்எஸ் அதிகாரியின் கார் ஓட்டுனராக பணியாற்றி வருவதாகவும், அவர் பழனி கோவிலுக்கு சென்றுள்ளதால், காரை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
வருமானவரித்துறை ஆணையரின் காரை சோதனை செய்யமாட்டார்கள் என நினைத்து, அதில் வைத்து கஞ்சா வியாபாரம் செய்ததாக போலீசாரிடம் வாணி வாக்குமூலம் அளித்தார். கொரட்டூரில் உள்ள வாணி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.