விடுமுறை தினம் என்பதால் சென்னையின் முக்கிய மீன்சந்தைகளில் தனிமனித இடைவெளியை காற்றில் பறக்கவிட்டவாறு அசைவப் பிரியர்களின் கூட்டம் களைகட்டியது.
ஆடி மாத முதல் வாரம் என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் சென்னை பட்டினப்பாக்கம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை மீன்சந்தைகளில் ஏராளமான மக்கள் மீன் வாங்கக் குவிந்தனர். மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால் இந்த இரு சந்தைகளிலும் மீன்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
காசிமேடு மீன் சந்தையிலும் திரளான மக்கள் கூட்டத்தைக் காண முடிந்தது. இங்கு மீன்களின் வரத்து குறைவாக இருந்ததால் விலையும் இரண்டு மடங்காகக் காணப்பட்டது. சாதாரணமாக கிலோ 600 ரூபாய்க்கு விற்கப்படும் வஞ்சிரம் மீன் 1300 ரூபாய்க்கும் 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாவளாசி, வவ்வால், பாறை உள்ளிட்ட மீன் வகைகள் 1200 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகின்றன.