சென்னை தொழிலதிபர் குடும்பத்தை கடத்தி சென்று கட்டிப்போட்டு, அடித்து உதைத்து, சொத்துக்களை எழுதி வாங்கியதாக எழுந்த புகாரில், திருமங்கலம் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், எஸ்ஐ உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டில் அயப்பாக்கம் தொழிலதிபர் ராஜேஷ் , அவரது மனைவி, தாயார் என ஒட்டு மொத்த குடும்பத்தையும் திருமங்கலம் காவல்துறையினர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் செங்குன்றத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு கொண்டு சென்று கட்டி வைத்து, அடித்து உதைத்து, அவர்களின் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் டிஜிபி உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் கடந்த 6 மாதங்களாக விசாரணை நடத்தினர்.
அப்போது திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், 3 காவலர்கள், தொழிலதிபர்கள் வெங்கடேஷ், சீனிவாச ராவ், அவரது கூட்டாளிகள் 2 பேர் என மொத்தம் 10 பேருக்கு, புகாரில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.