சென்னையில் துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும், இந்த கொடூரத்திற்கு உடந்தையாக இருந்த, சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மா ஆகியோரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சதீஷ்குமார் என்பவன், சென்னை மணலி காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக முன்னர் இருந்தபோது, ரேசன் கடையில் பணியாற்றும் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே தவறான உறவை, அந்தப் பெண்ணின் 15 வயது மகள் பார்த்துவிட்டதால், சதீஷ்குமார் அந்த சிறுமியை துப்பாக்கியால் மிரட்டியுள்ளான். சிறுமியையும், சிறுமியின் தம்பியையும் சுட்டுக் கொன்றுவிடுவேன் என உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மிரட்டியதால் சிறுமி பயந்துபோய் விஷயத்தை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார்.
ஆனால், போலீஸ் சீருடையில் இருந்த கறுப்பு ஆடான சதீஷ்குமாருக்கு நாளடைவில் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதற்காக சிறுமியின் தாயையும், பெரியம்மாவையும் சரிக்கட்டுவதற்கு, சதீஷ்குமார் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளான். ஆனால் சிறுமி உடன்பட மறுக்கவே, துப்பாக்கியால் மிரட்டி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளான்.
இந்த கொடூரத்திற்கு சிறுமியின் தாயும், பெரியம்மாவும் துணைபோயுள்ளனர். இதனால் பெரும் மனநெருக்கடிக்கும் உடல்நல பாதிப்புக்கும் ஆளான சிறுமி, தன் தந்தையிடம் விஷயத்தை கூறியுள்ளார். இதன் பிறகே, புகார் கொடுக்கப்பட்டு, புழல் மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். போக்சோ சட்டப்பிரிவிலும், துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளிலும் சதீஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து, அவனை கைது செய்துள்ளனர்.
இதேபோல, சதீஷ்குமாருக்கு உடந்தையாக இருந்த, சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மாவையும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ், போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு சென்னையில் ஒரு காவல் ஆய்வாளர், இதேபோல பாலியல் வன்முறைக் குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.