தமிழகத்தில் நீட் தேர்வை கைவிட வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
நீட் தேர்வு தொடர்பாக, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளோடு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பங்கேற்ற அதிகாரிகள், நீட் தேர்வை ஏற்க முடியாது என திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும், நீட் தேர்வில் ஏற்கனவே அமலில் இருக்கும் இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்பில்லை எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு எழுத்துப்பூர்வமான அறிக்கையாக ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.