தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. விதிகளை மீறுவோருக்கு, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் 2-வது அலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் வியாழக்கிழமை பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன.
கட்டுப்பாடுகளுடன் சில செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நிலையான கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் அமர்ந்து மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது, நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.
பலசரக்கு, காய்கறி கடைகள், வணிக வளாகங்கள், நகை மற்றும் ஜவுளிக் கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படுகின்றன. உணவகங்கள், தேநீர் கடைகளும் 50% இருக்கைகளுடன் மட்டுமே இயங்கி வருகின்றன. திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 100 பேரும், இறுதி ஊர்வலங்களில் 50 பேரும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நீச்சல் குளங்களில் விளையாட்டு பயிற்சி மட்டுமே அளிக்கப்படுகிறது.
வாடகை, டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகள் மட்டுமே பயணித்து வருகின்றனர். அதேபோல, ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் இனிமேல் திருவிழாக்கள் மற்றும் மத சார்ந்த கூட்டங்கள் நடத்த முடியாது. மொத்த காய்கனி வளாகங்களில் உள்ள கடைகளில் சில்லறை விற்பனை செய்ய இயலாது. மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்கள் தவிர சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை தொடரும்.
கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்கள் நீங்கலாக மற்ற வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதே சமயம் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் ஏதுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது.
இதனிடையே, தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. திருவாரூரில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை மீறிய இரண்டு திரையரங்குகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடலூர், தென்காசி, மதுரை, திண்டுக்கல், சேலம் மாவட்டம் எடப்பாடி, வேதாரண்யம், பல்லாவரம் ஆகிய பல்வேறு பகுதிகளிலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு தலா 200 ரூபாய் உடனடி அபதாரம் விதிக்கப்பட்டு வருகிறது.