தருமபுரி மாவட்டம் தொப்பூர் கனவாயில் விபத்து ஏற்பட்ட வளைவான தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் கூறினார்.
தொப்பூர் கனவாயில் பிரேக் பழுதான லாரி ஒன்று அடுத்தடுத்து 13 கார்கள் உள்ளிட்ட 15 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்தனர். அந்த சிசிடிவி காட்சி வெளியாகி இருந்தது.
இந்நிலையில் விபத்து நடந்த பகுதியை அமைச்சர் அன்பழகன், ஆட்சியர் கார்த்திகா மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், விபத்தை ஏற்படுத்திய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் புட்புதினை பிடித்து போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்தார்.