அரசு நிகழ்ச்சிகளிலும், கட்சி ஆலோசனையிலும் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பிற்பகலில் சென்னை வருகிறார். இதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிற்பகலில் சென்னை விமான நிலையம் வந்தடையும் அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், பா.ஜ.க நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.
அங்கிருந்து ஆலந்தூர், அண்ணா பல்கலைக்கழகம், மத்திய கைலாஷ், அடையாறு வழியாக சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு அமித்ஷா செல்கிறார். விமான நிலையம் முதல் லீலா பேலஸ் ஹோட்டல் வரை சுமார் ஏழு இடங்களில் பா.ஜ.க நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கவுள்ளனர். மாலை 4.15 மணிக்கு ஓட்டலில் இருந்து புறப்பட்டு கலைவாணர் அரங்கம் செல்கிறார்.
அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணிப்பது மற்றும் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப் பணிகள், சென்னை வர்த்தக மைய விரிவாக்கம், இந்தியன் ஆயில் நிறுவன திட்டப்பணிகள் உள்ளிட்ட சுமார் 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டி வைத்து அமித்ஷா சிறப்புரையாற்றுகிறார்.
கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மீண்டும் லீலா பேலஸ் ஓட்டலுக்கு வரும் அவர், இரவு 7 மணிக்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு 8.30 மணிக்கு அமித் ஷா தலைமையில் பாஜக உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக பாஜக நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி, சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. மேலும், கூட்டணி தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அமித் ஷா பேசக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
இன்று இரவு சென்னையில் தங்கும் அமித்ஷா, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
சென்னை விமான நிலையம், லீலா பேலஸ் ஹோட்டல் , கலைவாணர் அரங்கம் மற்றும் அமித் ஷா பயணிக்கும் சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.