அண்ணா பல்கலைக்கழகத்தில் நிதி மோசடி, பணி நியமனத்துக்கு லஞ்சம் என 280 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாகத் துணைவேந்தர் சுரப்பா மீது கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசனைத் தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழக அரசின் உத்தரவில், திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளித்துள்ள புகாரில் அண்ணா பல்கலைக்கழக நிதியில் 200 கோடி ரூபாய் முறைகேடு செய்ததில் துணைவேந்தர் சுரப்பா, துணை இயக்குநர் சக்திநாதன் ஆகியோருக்குத் தொடர்புள்ளதாகக் குற்றஞ்சாட்டியதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல் பல்கலைக்கழகத்திலும் அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் தற்காலிகப் பேராசிரியர் பணிக்கு ஒவ்வொருவரிடமும் 13 லட்ச ரூபாய் முதல் 15 லட்ச ரூபாய் வரை என சுரப்பாவும் சக்திநாதனும் 80 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவை தவிர அரியர் தேர்ச்சி விவகாரத்தில் AICTE-க்குத் தவறான தகவலை அனுப்பியது, முறைகேடாகத் தனது மகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தியது எனப் பல்வேறு புகார்கள் சுரப்பா மீது வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அவற்றின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசனை நியமித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. சுரப்பா பதவியேற்றது முதல் தற்போது வரை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பணி நியமனங்கள், நிதிப் பரிமாற்றங்கள், ஒப்பந்தங்கள், தேர்வு நடைமுறைகள், AICTE விவகாரம் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
சுரப்பா மீதான புகார்களில் உண்மைத் தன்மை இருந்தால், அவர் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை, எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பதற்கான வழிகள் ஆகியவற்றை அரசுக்குப் பரிந்துரைக்கவும் விசாரணை அதிகாரி கலையரசனுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2021 மார்ச் மாதத்துடன் சுரப்பா ஓய்வு பெற உள்ள நிலையில், இந்தப் புகார்களை 3 மாதக் காலத்துக்குள் விசாரித்து அறிக்கை தர உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பானவர்களோ, பொதுமக்களோ துணைவேந்தர் சுரப்பா மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டு அல்லது வேறு ஏதேனும் குற்றச்சாட்டு இருப்பின் புகார் அளிக்கலாம் என நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறித்துத் தனக்கு இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல் ஏதும் கிடைக்கப் பெறவில்லை என்றும், கிடைக்கப் பெற்ற பின் தன் கருத்தைத் தெரிவிப்பதாகவும் சுரப்பா தெரிவித்துள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த துணை வேந்தர் சுரப்பா, தன் மீதான முறைகேடு புகார் தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார். பணிமாறுதல் உள்ளிட்ட மிரட்டல்களுக்கு அடிபணியாததால் தன்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுயிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தனது மகளின் சேவை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தேவை என்பதாலேயே கவுரவ பணி கொடுக்கப்பட்டது என்று அவர் விளக்கம் அளித்தார். பல்கலைக்கழகத்தின் பணி நியமனங்கள் அனைத்தையும் அதிகாரத்திற்கு உட்பட்டே செய்துள்ளதாக அவர் கூறினார். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பைசா கூட தான் முறைகேட்டில் ஈடுபடவில்லை என்றும், பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் சுரப்பா திட்டவட்டமாக தெரிவித்தார்.