சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால், பிரதான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
ஒரு நாள் இரவு பெய்த மழைக்கே, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, சென்னை மாநகர் வெள்ளக்காடாக மாறியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. விடிய விடிய பெய்த கனமழை காலையிலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக நீடித்துது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டிய வால்டாக்ஸ் சாலையில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
கனமழையால் சாலைகளில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆங்காங்கே முறிந்து விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். மழைநீர் வடிகால்களை சீரமைத்தும், மோட்டார் மூலமாகவும் நீரை அகற்றி வருகின்றனர்.
எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை, மாண்டியத் வீதி உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீரமைத்து மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை வடிய வைத்து வைத்து வருகின்றனர். சூப்பர் சக்கர் இயந்திரம் மூலம் கழிவுநீர் கால்வாயில் உள்ள அடைப்புகள் சரிசெய்யப்படுகின்றன.
ராயப்பேட்டை பெசன்ட் சாலையிலும் மழைநீர் அகற்றும் பணி நடைபெற்றது.