தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து, 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உறவினர்கள் உடலைப் பெற்றுக் கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் என்ற இளைஞரை கடந்த 17 ஆம் தேதி காரில் கடத்திச் சென்ற கும்பல் அவரை அடித்துக் கொன்று உடலைத் திசையன்விளை அருகே கடக்குளம் என்னுமிடத்தில் போட்டுவிட்டுச் சென்றது.
நிலம் தொடர்பான தகராறில் நிகழ்ந்த இந்த கொலை வழக்கில் அதிமுக பிரமுகர் திருமணவேல், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது 4 பிரிவுகளில் திசையன்விளை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
கொலைக்குத் தூண்டுதலாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரிகிருஷ்ணனைக் கைது செய்யும் வரை செல்வனின் உடலை வாங்கப்போவதில்லை எனக் கூறி அவர் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சொக்கன் குடியிருப்பில் நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்டவை வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததால் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த செல்வனின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், செல்வன் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அதிமுக பிரமுகர் திருமணவேல், அவரின் கூட்டாளி முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இருவரையும் மூன்று நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.
இதனிடையே தட்டார் மடம் செல்வன் கொலை வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. செல்வன் கொலை வழக்கில் திருமணவேலிடம் விசாரணை நடத்திய பின்னரே முதலாவதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஹரிகிருஷ்ணனைக் கைது செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்த நிலையில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திருமணவேல் என்பவரை மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கியுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதனிடையே போராட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் தண்டுபத்து வீட்டுமுன் நிறுத்தியிருந்த அவரது காரை நள்ளிரவில் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்திய புகாரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.