சென்னை பல்லாவரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, புதிதாக திறக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தில் இருவழி போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அந்த பாலத்தில் சென்னையை நோக்கிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. மாநகரில் இருந்து வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் மாலை நேரங்களில் பழையபடியே கீழே உள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே புதிய பாலத்தில் இருவழிப் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது பற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, புதிதாக திறக்கப்பட்ட உயர்மட்ட பாலத்தின் உள் அளவு 11 மீட்டரே இருப்பதாகவும், இருவழிப்பாதையாக மாற்றும் விதத்தில் இல்லை என்றும் தெரிவித்தார்.
அதே சமயம் அதன் கீழே உள்ள சென்னையில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் சாலை தற்போது 8 மீட்டர் அகலம் உள்ள நிலையில், அதனை மேலும் 3 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.