சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் தொடர்புடைய போலீஸ் கைதிகள் 5 பேர் 2 நாட்கள் சிபிஐ காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், காவலர் முத்துராஜ் நீங்கலாக 4 போலீசாரை ஜூலை 30 வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரை, சிபிஐ அதிகாரிகள் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
முதற்கட்டமாக தந்தை, மகனை கைது செய்த காவலர் முத்துராஜை சாத்தான்குளம் அழைத்து சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள், தொடர்ந்து புதன்கிழமை இரவு 5 பேரையுமே சாத்தான்குளத்தில் சம்பவ இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது எழுத்தர் பியூலாவிடமும் விசாரணை நடத்தப்பட்டதோடு, வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் தலைமை காவலர் ரேவதியும் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து போலீஸ் கைதிகளுடன் மதுரை திரும்பிய அதிகாரிகள், ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்தில் 3வது நாளாக விசாரணை மேற்கொண்டனர்.
5 பேரிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. இதையடுத்து 5 பேரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்திய சிபிஐ அதிகாரிகள், பரிசோதனை முடிந்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமானந்த குமார் முன்பு ஆஜர்படுத்தினர்.
தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகிய 4 பேரையும் ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி, காவலர் முத்துராஜுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைவதால் அவரை, மீண்டும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து 5 போலீசாரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையிலடைப்பட்டனர்.