மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் இணையதளம் மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல லட்சம் மக்கள் ஒன்றுகூடும் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவில்லை. இருப்பினும் பக்தர்களின் ஆத்ம திருப்திக்காகவும், பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி வழக்கம்போல் இன்று நடைபெறுகிறது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால், திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி 05 நிமிடம் முதல் 9 மணி 29 நிமிடங்களுக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உள்ள சேத்தி மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் முறைப்படி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி இணையதளம் வாயிலாக நேரலையாக ஒளிபரப்பப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டதும் பெண் பக்தர்கள் தங்களது தாலிக்கயிறை புதிதாக மாற்றிக் கொள்ளலாம் என சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.