நேற்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அரசின் பல்வேறு தீவிர நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் தமிழகத்தின் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
நேற்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1082 ஆக உயர்ந்துள்ளது. இதில் 219 பேர் குணமடைந்த நிலையில் , 841 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் மண்டலங்களின் அடிப்படையில், அதிகபட்சமாக திரு.வி.க நகரில் 259 பேர், ராயபுரத்தில் 216 பேர், தேனாம்பேட்டையில் 132 பேர் மற்றும் கோடம்பாக்கத்தில் 116 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கும் சென்னையில் நோய்த்தொற்று பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 பெண் பயிற்சி மருத்துவர்கள் உட்பட 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 பெண் மருத்துவர்கள் உட்பட 3 பேருக்கும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 மருத்துவர்களுக்கும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஏற்கனவே ஒரு மருத்துவருக்கு நோய்த்தொற்று உறுதியான நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு மருத்துவருக்கும் கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, திரு.வி.க நகர் மண்டலத்தில் 49 பகுதிகள், ராயபுரம் மண்டலத்தில் 56 பகுதிகள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 28 பகுதிகளும் வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் கொண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 63 சதவீதம் பேர் ஆண்களே என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 20-29 வயதுக்குட்பட்டவர்கள் 242 பேருக்கும், 30-39 வயதுக்குட்பட்டவர்கள் 237 பேருக்கும், 40-49 வயதுக்குட்பட்டவர்கள் 195 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், நேற்று மட்டும் புதியதாக 5 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, 9 வயதுக்குட்பட்டு 34 குழந்தைகள் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் வெளிமாநில மற்றும் மாவட்டங்களுக்கு செல்வதற்கான பயண அனுமதி சீட்டு பெற, இனி யாரும் நேரில் வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதலின் படி அவசர பயண அனுமதி சீட்டு வழங்கும் அதிகாரம் மாநில ஈ-பாஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இனி குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் விண்ணப்பித்து அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றும், மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.