குரூப் 1 தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 குரூப் 1 தேர்வில் விடைத்தாள்களை வெளியே எடுத்து திருத்தி மோசடி நடந்துள்ளதாகவும் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திருநங்கை ஸ்வப்னா என்பவர் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 2 ஆண்டுகளாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தி.மு.க.வின் மனுவில், தேர்வு செய்யப்பட்ட74 பேரில் 62 பேர் மனித நேய பயிற்சி மையம் மற்றும் அப்போலோ பயிற்சி மையங்களில் இருந்து மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்மையான விசாரணை நடைபெற வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவும் கோரப்பட்டுள்ளது.
விசாரணையின் போது மத்திய குற்றப்பிரிவின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபட்ட டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2015-ல் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு தற்போது சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்றும் வாதிடப்பட்டது.
அப்போது பிரதான குற்றவாளியாக இருக்கும் டி.என்.பி.எஸ்.சி., தனக்கு எதிரான விசாரணையை யார் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்க கூடாது என தி.மு.க. தரப்பில் வாதிடப்பட்டது
இதையடுத்து தமிழக அரசு, டி.என்.பி.எஸ்.சி., சி.பி.ஐ பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.