2016ஆம் ஆண்டு குரூப் 4 தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வு, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் அடிப்படையில், கடந்த 2016ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த விழுப்புரம் மாவட்டம் அரியூரை சேர்ந்த நாராயணன் என்கிற சக்தி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்வில், மேலும் நான்கு நபர்கள் முறைகேடு செய்து தற்போது அதிகாரிகளாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் கடந்த 7ஆம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட விஏஓ கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அடுத்தக்கட்ட புலன் விசாரணையை துவக்கி உள்ளனர்.