சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராகுல் டிராவிட் பந்து வீச, பேட்டிங் செய்தார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மைதானத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்கு ராகுல் டிராவிட் பந்து வீச பேட்டிங் செய்தார்
முன்னதாக விழாவில் பேசிய இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் சீனிவாசன் இந்த மைதானத்தை பார்வையிட தோனி, ஸ்டீஃபன் பிளமிங் உள்ளிட்டோரை அழைத்து வர இருப்பதாகக் கூறினார். ஓராண்டுக்குள் இந்த மைதானத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் மட்டுமே ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சேலம் மாவட்ட மைதானத்தில் ஐ.பி.எல். போட்டிகள் என்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். மைதானத்தை மேம்படுத்த அரசுத் தரப்பில் ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் கூறினார்.
முன்னதாக பேசிய ராகுல் டிராவிட் இந்த மைதானத்தில் விளையாட தான் ஆசைப்பட்டாலும், தற்போதைய நிலையில் தான்னால் விளையாட முடியாது என ஏக்கம் வெளியிட்டார். இந்த மைதானம் பல்வேறு சிறந்த வீரர்களை உருவாக்க வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார்.