வாக்காளர்கள் எவ்வளவு திட்டினாலும் மானம், வெட்கம், ரோஷம் எல்லாவற்றையும் மனதுக்குள் அடக்கி கொண்டு சிரித்துக்கொண்டே தாங்கள் ஓட்டுக் கேட்பதை போல சுங்கச்சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே ஏற்படும் பிரச்சனையை தீர்ப்பதற்கான, திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தனது சொந்த அனுபவங்களை கூறி சுங்கச் சாவடி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் அடிக்கடி ஏற்படும் பிரச்சினையால் தனது வாக்குகள் பாதிக்கப்படுவதாக கூறிய அமைச்சர் உதயகுமார், சுங்கச்சாவடி பிரச்சனைக்கு வருவாய் துறை அமைச்சர் தான் காரணம் என சிலர் கொளுத்திப் போட்டு விடுவதாக தெரிவித்தார்.
மாற்றான் தாய் மனப்பான்மையோடு வாகன ஓட்டிகளை பார்க்காமல் சகோதரர்களாக நினைத்து, உரிய விதிமுறைகளை பின்பற்றி, மென்மையாக சுங்கச் சாவடி ஊழியர்கள் பழகினாலே பிரச்சனை வராது என அவர் குறிப்பிட்டார்.