தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில், அமைந்துள்ள ஆனந்தவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் தை தெப்பத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி அலைவாய் உகந்த பெருமான் தங்கமயில் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலன் ஆலயத்தில் முருகப்பெருமான் வள்ளி மற்றும் தெய்வானையுடன் பனை ஒலைகளால் செய்யப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அனந்தபுரத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும் அங்கபிரதட்சணம் செய்தும் தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை எடுத்து பக்தர்கள் நூதன வழிபாடு நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் தேவதானப்பேட்டையில் உள்ள முருகன் ஆலயத்தில் நடைபெற்ற மிளகாய் பொடி அபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதுபோல் தென்காசி,சாத்தூர், அம்பத்தூர், காங்கேயம், மானாமதுரை,கொல்லிமலை, வால்பாறை, தோவாளை, குளித்தலை,பெரம்பலூர், தூத்துக்குடி,ராமேஸ்வரம் ஆகிய இடங்களிலும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.