தைப்பூசத்தை முன்னிட்டு பழனி நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகையால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூச விழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். மேளதாளம், ஆட்டம்பாட்டத்துடன் காவடி எடுத்தல், அலகு குத்துதல் என பலவகைகளில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் 7ஆம் தேதி மாலையும் தேரோட்டம் 8ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதற்காக 300 சிறப்புப் பேருந்துகள், 3500 போலீசார் என பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.