திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆம்னி வேன் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில், இருவர் உடல் கருகி உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் குடும்பத்துடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். மணிகண்டன் என்பவர் வேனை ஓட்டிவந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் திருஈங்கோய்மலை அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர்புறமாகச் சென்று பள்ளத்தில் பாய்ந்து அங்கிருந்த மரத்தின் மீது மோதி தீப்பிடித்திருக்கிறது.
முன்புற கதவுகளை திறக்க முடியாமல் மயில்சாமியும் மணிகண்டனும் உடல் கருகி உயிரிழந்த நிலையில், வேனில் இருந்த 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். ஓட்டுநரின் தூக்கக்கலக்கத்தால் விபத்து நேர்ந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது.