வெளிநாடுகளில் இருந்து பட்டாணி இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க கோரி, மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழகத்தில் இயங்கி வரும் பருப்பு மற்றும் மாவு ஆலைகளில் 50,000 தொழிலாளர்கள் நேரடியாகவும், 65,000 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடமாநில பட்டாணி விலை அதிகம் என்பதால் ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டு வந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் நாடு முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு மேல் பட்டாணி இறக்குமதி செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு காரணமாக இறக்குமதி பட்டாணி விலையும் கிலோ 65 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் ஆலைகளும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், கட்டுப்பாடுகளை நீக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.