பிகில் படத்துக்கு வாங்கிய சம்பளம், அதற்கு கட்டிய வருமான வரி குறித்து நடிகர் விஜய்யிடம் 2ஆவது நாளாக வருமான வரித்துறையினர் இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். பிகில் படத்தை விநியோகம் செய்த பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் இன்று ஒரே நாளில் 65 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் வீட்டில் நேற்று மாலை 5 மணியளவுக்கு வந்த வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பிறகு இரவு 9 மணியளவில் அங்கு அழைத்து வரப்பட்ட விஜய்யிடமும் வருமான வரித்துறையினர் 10 பேர் விசாரணை நடத்தினர்.
அப்போது பிகில் படத்தின் சம்பளம் தொடர்பாக கிடைத்த ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பிறகு 7 பேர் வெளியேறிய நிலையில், 3 பேர் மட்டும் விஜய்யிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று காலை மேலும் 6 அதிகாரிகள் விஜய் வீட்டுக்கு வந்தனர். அவர்களும் ஏற்கெனவே விசாரணை நடத்திய 3 பேருடன் சேர்ந்து, விஜய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின்போது விஜய் வீட்டில் அவரை தவிர்த்து வேறு யார் இருந்தார்கள் என்பது குறித்தோ, பணம் எதுவும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்தோ தகவல் தெரியவில்லை. காலை பத்து மணி அளவில் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு விஜய் வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யப்பட்டது.
இதனிடையே வரி ஏய்ப்பு தொடர்பாக கிடைத்த தகவலின்பேரில், ஏஜிஎஸ் நிறுவன அலுவலகங்கள், திரையரங்குகள், ஏஜிஎஸ் உரிமையாளர் கல்பாத்தி அகோரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பிகில் படத்தை சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களில் விநியோகம் செய்த பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையிலுள்ள வீடுகள், அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் 2வது நாளாக நடத்திய சோதனையில் 65 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது. சென்னையில் 50 கோடி ரூபாயும், மதுரையில் 15 கோடி ரூபாயும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஏஜிஎஸ் மற்றும் அன்புச் செழியன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 24 கோடி ரூபாய் சிக்கியதாக கூறப்படுகிறது. ஒட்டு மொத்தமாக இந்த சோதனையில் தற்போது வரை 89 கோடி ரூபாய் சிக்கியுள்ளது.