உலக வங்கி நிதி உதவியுடன் மாநிலத்தின் முக்கிய 36 அணைகளை வலுப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு வரும் ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்த உள்ளது.
நாட்டில் உள்ள பெரிய அணைகளை வலுப்படுத்தி அவற்றின் கொள்ளளவுத் திறனை அதிகரிக்கும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன் முதல் கட்டம் தமிழகத்தில் கடந்த 2012 ல் துவக்கப்பட்டு 803 கோடி ரூபாய் செலவில் 67 அணைகள் வலுப்படுத்தப்பட்டதுடன், பேச்சிப்பாறை, மணிமுத்தார் அணைகளில் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.
இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக 610 கோடி ரூபாய் செலவில் 36 அணைகளை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இதற்காக அணைப்பாதுகாப்பு தொடர்பான கூடுதல் சிறப்பு நிபுணர் குழுவை அமைக்கவும் தமிழக அரசு தனது ஒப்புதலை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
அணைகளை வலுப்படுத்தும் திட்டத்தின் முன்னோடியாக, அணைகளை குறித்து ஆய்வு செய்ய 99 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.