தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா தொடரை இயக்குனர் நீராவி பாண்டியன் இயக்கி வருகிறார்.
அந்த நாடகத்தின் படப்பிடிப்பு, திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. திருமண நிகழ்ச்சி போன்ற காட்சிகளை இயக்குனர் நீராவி பாண்டியன் இயக்கிக் கொண்டிருந்தார். இதற்காக 50க்கும் மேற்பட்ட துணை நடிகைகள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அப்போது காட்சிகளை இயக்கிக் கொண்டிருந்த நீராவி பாண்டியன், தனது கையில் இருந்த மைக்கில் அனைவரும் கேட்கும் வகையில், துணை நடிகைகளை அறுவறுக்கத்தக்க மற்றும் ஆபாசமான வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த துணை நடிகைகள், படப்பிடிப்பை புறக்கணித்து, மண்டபத்துக்கு வெளியே வந்தனர்.
இதுகுறித்து திருவேற்காடு காவல்நிலையத்திலும் துணை நடிகைகள் புகார் அளித்தனர். இதன்பேரில் திருவேற்காடு காவல்நிலைய போலீஸார், சம்பவ இடம் வந்து துணை நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிறகு நீராவி பாண்டியன் மற்றும் அவருடன் இருந்த 2 பேரை திருவேற்காடு காவல்நிலையத்துக்கு காவல் வாகனத்தில் கொத்தாக தூக்கிச் சென்றனர்.
நீராவி பாண்டியனிடம் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, காவல்நிலையத்தை முற்றுகையிட்ட துணை நடிகைகள் 15 பேர், அவர் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் 3 பேரையும் மீண்டும் திருமண மண்டபத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது அங்கிருந்த துணை நடிகைகளிடம் மைக் மூலம் இயக்குனர் நீராவி பாண்டியன் மன்னிப்புக் கேட்டார்.
இதையேற்றுக் கொண்டு, திருவேற்காடு காவல்நிலையத்தில் அளித்திருந்த புகாரை துணை நடிகைகள் வாபஸ் பெற்றனர்.