தமிழ்நாட்டில், மாநில பாடத்திட்டத்தில் பயிலும், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அதற்கேற்ற வகையில், சிறப்பு வகுப்புகளை நடத்தி, மாணவர்களை தயார்படுத்தி வந்தன. அதேவேளையில், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பினரும், அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று முடிந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடத்துவதாக, கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் வரப்பெற்ற கோரிக்கைகளை, தமிழ்நாடு அரசு கவனமுடன் பரிசீலித்து, 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.