சென்னை மாநகரச் சாலைகளில் இரவு நேரங்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் பெண் ஒப்பந்த பணியாளர்களுக்கு சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மாநகரில் இரவு நேரங்களில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர்கள், சாலைகள் மற்றும் சாலையோர பிளாட்பாரங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.
கையுறை, சுவாசக்கவசம் உள்ளிட்டவை இன்றி அவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவதாகவும் அதனால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம், நள்ளிரவில் போதையில் சுற்றும் சமூக விரோதிகள் பெண் பணியாளர்களை குறிவைத்து தொல்லை செய்வதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. எனவே இதுபோன்ற பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.