கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக-கேரள எல்லை பகுதிகளில் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரளாவில் இருந்து வருபவர்களையும், வாகனங்களையும் சோதனை செய்து வாகனங்களுக்கு கிருமிநாசினி மருந்து அடிக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எல்லைப் பகுதிகளான கம்பம் மெட்டு பழைய சோதனைச்சாவடி, லோயர்கேம்ப் பஸ்டாண்டு, போடிமெட்டு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பம் மெட்டு பழைய சோதனைச்சாவடி பகுதியில் புதுப்பட்டி சுகாதார ஆய்வாளர் தலைமையிலும், லோயர்கேம்ப் பஸ்டாண்டு பகுதியில் கூடலூர் சுகாதார களமேற்பார்வையாளர் தலைமையிலும் மருத்துவக்குழுவினர் சோதனை செய்கின்றனர்.
கேரளாவிலிருந்து வாகனங்களில் வருபவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என சோதனை செய்கின்றனர். சளி, காய்ச்சல், வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்துகின்றனர். மேலும் வாகனங்களுக்கு கிருமிநாசினி மருந்து அடித்து வருகின்றனர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 8 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.