மகாத்மா காந்தியின் 73வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 73வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் சென்னை சர்வோதய சங்கம் சார்பில் மகாத்மா காந்தியின் விருப்ப பாடலான ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் பாடப்பட்டது.
பின்னர் சர்வோதய சங்கத்தை சேர்ந்த மூதாட்டி சுப்புலட்சுமி மெரினாவில் காந்தி சிலை அமைந்ததற்கான வரலாற்று தகவல்களை வழங்க, ஆளுநர், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியை ஒட்டி காந்தி சிலைக்கு தறியால் நெய்யப்பட்ட கதர் நூல் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.