தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 335 இடங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி நடைபெற்றது.
ஆனால் பல்வேறு காரணங்களுக்காக சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், 26 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், 41 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் 266 ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நிறுத்தப்பட்ட 335 பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கும், பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றும், மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி மறைமுக தேர்தல் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மறைமுக தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்வதுடன், போதிய பாதுகாப்பு வசதிகளும் செய்து தயாராக இருக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியிடங்களுக்கு அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. திமுக வசம் 8 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களும் அதிமுக வசம் 8 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் என சரிசமமாக பலம் உள்ளது.எனவே வாக்குப்பதிவு துவங்கி சரிசமமாக வாக்குகள் பதிவானால் விதிகளின்படி குலுக்கல் முறையில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இதனிடையே, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அந்த ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 வார்டு உறுப்பினர்கள், தங்கள் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாகவும், சில உறுப்பினர்கள் கடத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 11ந் தேதியன்று மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக தற்போது மீண்டும் மறைமுகத் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.