கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் சுகுணா மற்றும் அதிமுக வேட்பாளர் மலர்விழி ஆகியோர் தலா 12 வாக்குகள் பெற்றனர். குலுக்கல் முறையில் தேர்வு செய்ய எதிர்ப்பு எழுந்ததால், தேர்தல் 30ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் மறு தேர்தலுக்கு தடை விதிக்க கோரி திமுக வேட்பாளர் சுகுணா தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. மங்களூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலுக்கு தடை விதித்த நீதிபதி, மாநில தேர்தல் ஆணையம், அதிமுக வேட்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.