தமிழகம் முழுவதும் 211 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வழி பரிமாற்ற மேம்பாலம், 2 அடுக்கு மேம்பாலம் உள்ளிட்ட 17 பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் 91 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை எண் 45ஐ சென்னை வெளிவட்டச் சாலையுடன் இணைக்கும் வகையில் வண்டலூர் முதல் மண்ணிவாக்கம் வரை 2 புள்ளி 65 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில்வே மேம்பாலத்துடன் கூடிய ஒரு ஏறு தளம் மற்றும் 2 இறங்கு தளங்களுடன்பல்வழி பரிமாற்ற மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருந்து கானொலி காட்சியின் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
கோவை காந்திபுரம் பகுதியில் 100 அடி சாலை முதல் ராமகிருஷ்ணா சாலை வரை 1.75 கிலோ மீட்டர் தூரத்துக்கு 75 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தையும் முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையடுத்து காந்திபுரத்தில் உள்ள மேம்பாலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடி அசைத்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கோவை நகர மக்களின் போக்குவரத்து வசதிக்காக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளதாக கூறினார்.
நாமக்கல், திருப்பூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள ஒரு 2 அடுக்கு மேம்பாலம் மற்றும் 14 ஆற்றுப் பாலங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இதேபோல் சென்னை மாநகர சாலைகள் கோட்டத்திற்கு 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான சாலைகளை துப்புரவு செய்யும் 6 இயந்திர வாகனங்கள், சாலைகளில் ஏற்படும் குழிகளை சரிசெய்யும் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு இயந்திர வாகனம் மற்றும் சிறிய உருளை இயந்திரம்; மழை நீர் வடிகால் மற்றும் சிறுபாலங்களில் தேங்கியுள்ள கசடுகளை உறிஞ்சிட 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு இயந்திர வாகனம் மற்றும் மண் அகற்றும் சிறிய இயந்திரம் ஆகியவற்றை நெடுஞ்சாலைத் துறையின் சாலை பராமரிப்பு பயன்பாட்டிற்காக முதலமைச்சர் வழங்கினார்.