தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவு செய்வோரின் பட்டியலை சேகரித்து அறிக்கை அளிக்க சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி ஒருவர் குறித்து சமூக வலைதளத்தில் ஆபாசமாக கருத்து பதிவிட்ட சென்னையை சேர்ந்த மருதாசலம் என்பவரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து ஜாமீன் கோரி மருதாசலம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துக்களை பதிவு செய்தவர்களின் பட்டியலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது சைபர் கிரைம் போலீசார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அறிக்கை திருப்தியாக இல்லை என தெரிவித்த நீதிபதி தண்டபாணி, தமிழகம் முழுவதும் ஆபாசக்கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவோரின் பட்டியலை தயாரித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார். மன்னிப்பு கடிதம் அளிக்கும் பட்சத்தில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் நீதிபதி கூறினார்.