குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரம், கீழக்கரை வட்டாட்சியர்கள் உட்பட 12 பேரிடம் சென்னையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் குரூப் - 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார், நேற்று மாலை தமிழக காவல்துறை இயக்குநரிடம் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து இது தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிபிசிஐடி எஸ்.பி மல்லிகா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர்.
கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜா, ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி உள்ளிட்ட 12 பேரிடம் சென்னை எழும்பூரிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களிடமும், அவர்களுக்கு உதவிய இடைத்தரகர்களிடமும் விசாரணை நடத்தப்படும்.
இதனிடையே விசாரணைக்கு ஆஜராகியுள்ள தேர்வர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் இருவர், அவர்களது நண்பரான ஆவடியை சேர்ந்த ஓட்டுநர் ஒருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே போலி ஓ.எம்.ஆர் விடைத்தாள்களை பயன்படுத்தியும் முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.